Sunday, June 20, 2010

சிறைக்குள் போதைபொருள் வீசிய பெண் அதிரடி கைது

சேலம் பெண்கள் கிளை சிறைக்குள் போதை பொருள் வீசி மகள் மூலம் கைதிகளுக்கு விற்பனை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சேலம் இரும்பாலை ரோடு கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மைதிலி. அவர் கஞ்சா கடத்தல், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டார். மைதிலியை போலீஸார் பெண்கள் கிளை சிறையில் கைது செய்து அடைத்தனர். மைதிலியின் தாயார் சாந்தி(55), மகளை பார்க்க அடிக்கடி கிளை சிறைக்கு வந்து சென்றுள்ளார். மகள் மூலம் பெண்கள் கிளை சிறைக்குள் போதை பொருள்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.



அதன்படி சாந்தி பெண்கள் கிளை சிறை சுற்றுச்சுவர் அருகே இருந்து சிறைக்குள் போதை பொருள்களை வீசி எறிந்துள்ளார். அதை எடுத்து மைதிலி சக பெண் கைதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த புகார் குறித்து சிறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். தமிழக பெண்கள் கிளை சிறைத் துறை டி.ஐ.ஜி. ராஜசவுந்தரி சிறைக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சுற்றுச்சுவர் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி சென்றார். பெண்கள் கிளை சிறையை சுற்றி வார்டன்கள் ரோந்து சென்றனர். கிளை சிறை சுற்றுச்சுவர் அருகே நின்றிருந்த சாந்தி, பொட்டலங்களை மடித்து சிறைக்குள் வீசி எறிந்து கொண்டிருந்தார். சிறை போலீஸார் சாந்தியை சுற்றி வளைத்து பிடித்தனர். சிறைக்குள் வார்டன்கள் சென்று ஆய்வு செய்த போது, ஆறு பொட்டலம் பான்பராக், 17 மூக்குப்பொடி டப்பா ஆகியவை சாந்தி சிறைக்குள் வீசியது தெரியவந்தது. மைதிலி மூலம் பெண்கள் கிளை சிறை கைதிகளுக்கு சாந்தி போதை பொருள் விற்பனை செய்ய உதவியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சிறை அதிகாரிகள் புகார் அளித்தனர். சிறைக்குள் போதை பொருள்களை வீசி எறிந்த சாந்தியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23091


No comments:

Post a Comment