Monday, June 7, 2010

போலீஸ் "டார்ச்சரில்' பள்ளி மாணவர்கள்



சிவகாசியில் போலீஸ் விசாரணையில், துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவர்களில் ஒருவர், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுதொடர்பாக, போலீசார் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் காளிராஜன்(13). எட்டாம் வகுப்பு படிக்கிறார். நார்னாபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன்கள் பால்பாண்டி(14), செந்தில் குமார்(11). இவர்களும் காளிராஜன் படிக்கும் பள்ளியில் முறையே 9, 6ம் வகுப்பு படிக்கின்றனர்.


ஜூன் 5 அதிகாலை 2 மணிக்கு, மூவரையும் அவரவர் வீட்டிலிருந்து, நகை திருட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த போலீசார் அழைத்துச் சென்றனர். காலை 6.30 மணி வரை லத்தியாலும், பூட்ஸ் கால்களாலும் கடுமையாக தாக்கியதில் மூவரும் காயமடைந்தனர். திருட்டு குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், விடுவிக்கப்பட்டனர். பின், போலீஸ் தாக்கியதாக கூறி, சிவகாசி அரசு மருத்துவமனையில் மாணவர்கள் சேர்ந்தனர். இதில், காளிராஜன் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.


அவர் கூறியதாவது: போலீஸ் தாக்கியதில் எனக்கு தலை, முதுகு, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. தவிர, விரல்களில் ஊசியால் குத்தி கொடுமைப்படுத்தினர். காயம் ஏற்பட்டதால், போலீசாரே அருகில் உள்ள கிளினிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து, மருந்து கொடுத்தனர், என்றார்.


இச்சம்பவம் குறித்து, நேரில் ஆய்வு செய்த மதுரை "எவிடன்ஸ்' அமைப்பின் நிர்வாகி கதிர் கூறியதாவது : நகை திருட்டில் சிறுவர்கள் ஈடுபட்டதாக போலீசார் கூறுகின்றனர். உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த அளவிற்கு கொடுமைப்படுத்தி இருக்கக்கூடாது. இரவு கைது செய்யும் போது, மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை விதிமுறைகள்கூட, இவர்கள் விஷயத்தில் மீறப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு பயந்து, மற்ற இரு மாணவர்களும் பெற்றோருடன் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை போலீசாரே கடத்திச் சென்று, "சமரசமாக போவோம்' என்று மிரட்டுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, நடவடிக்கை எடுப்பதாக கூறினார். சிறுவர்களை கொடுமைப்படுத்திய போலீசார் மீது, மனித உரிமை மீறல் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர உள்ளோம், என்றார்


No comments:

Post a Comment