எச்சரிக்கை செய்தும் தாயுடன் உள்ள கள்ளத்தொடர்பை துண்டிக்க மறுத்ததால் பக்கத்து வீட்டுக்காரரின் 2 வயது குழந்தையை கொலை செய்தேன் என கைது செய்யப்பட்ட சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் கணேசன். மனைவி அழகம்மாள். இவர்களின் 2 வயது குழந்தை ஜோதிசங்கர். நேற்று காலை குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்திவீரன் (14) என்ற சிறுவனிடம் கூறிவிட்டு அழகம்மாள் வயலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அவரது வீட்டு வாசலில் ஒரு கடிதம் இருந்தது. அதில், ‘சிறுவனை கடத்தியுள்ளோம். ரூ.30 லட்சம் தந்தால் உயிருடன் விட்டு விடுவோம். பணத்துடன் கன்னியாகுமரி வரவும்’ என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஆமத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திவீரனிடம் விசாரித்தனர். அவன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தான். சந்தேகமடைந்த போலீசார், அவனது கையெழுத்தையும், கடிதத்தில் இருந்த கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். இரண்டும் ஒன்றாக இருந்தது. இதையடுத்து அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக சந்திவீரன் ஒப்புக்கொண்டான். அவன் கொடுத்த தகவலின்பேரில் வீட்டின் கழிப்பறையை சோதனை செய்தனர். அங்கு 5 அடி பள்ளம் தோண்டப்பட்டு, சாக்கில் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஜோதிசங்கர் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
குழந்தையை கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசில் சிறுவன் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்:
என் தாய் ராமலட்சுமிக்கும் கணேசனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. அதை நேரில் பார்த்துவிட்டேன். இதுகுறித்து அழகம்மாளிடம் தெரிவித்து, ‘என் தாயிடம் உன் கணவன் வைத்துள்ள தொடர்பை உடனடியாக துண்டிக்க வேண்டும்’ என எச்சரித்தேன். ஆனால், அதை கணேசன் கேட்கவில்லை. இதனால், ஆத்திரம் தலைக்கேறியது. கணேசனை கொல்ல முடிவு செய்தேன். பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டேன்.
மகனை நினைத்து கணேசனும், அவரது மனைவியும் காலம் முழுவதும் அழவேண்டும். அதற்காக அவர்களது குழந்தையை கொல்ல முடிவு செய்தேன்.
இதற்காக 10 நாட்களுக்கு முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக குழிதோண்டி தயாராக வைத்திருந்தேன். நேற்று சந்தர்ப்பம் கிடைத்ததும் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, சாக்கில்போட்டு புதைத்தேன். போலீசை திருப்ப கடிதம் எழுதி வைத்தேன். ஆனால், வசமாக போலீசில் சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு சிறுவன் சந்திரவீரன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
கடந்த 2009&ம் ஆண்டு மார்ச் 4&ம் தேதி தன்னுடன் படித்த சதீஷ்குமாரை கொலை செய்த வழக்கில் சந்திவீரன் கைது செய்யப்பட்டான். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவன் 6 மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் விடுதலையானான். தற்போது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை பழி வாங்க அவரது 2 வயது குழந்தையை கொன்றுள்ளான். இந்த சம்பவம் விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்திவீரன் இன்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுவான் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, கொலையான 2 வயது குழந்தையின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment