Sunday, June 20, 2010

குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த நான்கு பெண்கள் சிக்கினர்

குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளை தத்து எடுத்து, அவற்றை குழந்தையில்லாதோர் மற்றும் வெளி மாநிலத்தவருக்கு விற்கும் "நெட்வொர்க்கின்' உறுப்பினர்களை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கடந்த 5ம் தேதி காலை மாதவரம் தனியார் மருத்துவமனையில், திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர்ந்த முரளிதரன்(37) மனைவி கவிதாவுக்கு(29) பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை, மர்மப் பெண் ஒருவரால் கடத்தப்பட்டது.மாதவரம் போலீசார், குழந்தையை கடத்திச் சென்ற மர்மப் பெண்ணின் விவரங்களை, கடத்தப்பட்ட குழந்தையின் பாட்டி அமுதா மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மர்மப் பெண்ணை பார்த்தவர்களிடம் விசாரித்தனர்.



அவர்கள் தெரிவித்த விவரங்களின்அடிப்படையில், மர்மப் பெண்ணின் படம் வரையப்பட்டு, போலீசார் தேடுதல்வேட்டையில் இறங்கினர்.சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்பேரில், மாதவரம் துணை கமிஷனர் ஆனி விஜயா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான தனிப்படை போலீசார், குழந்தை கடத்தல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இன்று வரை காணாமல் போன பெண் குழந்தை கிடைக்கவில்லை.கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி, புதுச்சேரி, பண்ருட்டி ஆகிய இடங்களில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த கும்பல், போலீசில் சிக்கியது. இது தொடர்பாக தனலட்சுமி, பெரம்பூரைச் சேர்ந்த கிரிஜா, அவரது கணவர் சிவா, ராணி, பாதிரியார்கள் அல்போன்ஸ் சேவியர், செல்வம், புதுச்சேரியைச் சேர்ந்த லலிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாதவரத்தில் குழந்தை கடத்திய பெண்ணுக்கும், மேற்கண்ட கும்பலுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாதவரம் அடுத்த மூலக்கடை பஸ் நிறுத்தம் அருகே குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற பெண், தனிப்படை போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர், பாலவாக்கம் யுனிவர்சிட்டி அவென்யூ, ஒன்றாவது முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த நான்சி(28) என்பது தெரிந்தது.




கடந்த 2007ல் திருமணமான அவரது கணவர், மாரடைப்பால் இறந்துவிட்டார். இதையடுத்து, சினிமா மற்றும் "டிவி' சீரியல்களில் நடித்து பணம் சம்பாதிக்க முயற்சித்தார். ஆனால், எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, நீலாங்கரை டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்த ஜெயபிரசாத்(36) என்பவருடன் நான்சிக்கு பழக்கம் ஏற்பட்டது.அவர் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக நான்சியுடன் நெருங்கிப் பழகினார்.ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்பிய அவர்களுக்கு போதிய பணவசதி இல்லை. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தனர். இந்நிலையில், குழந்தைகளை தத்து எடுத்து பணக்காரர்கள் மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்கும் திட்டம் உருவானது.




இதையடுத்து, புதுச்சேரியில் அங்கீகரிக்கப்படாத ஆசிரமங்களில் இருந்து, தம்பதியர்போல் குழந்தைகளை தத்து எடுத்தனர். அவற்றை கணிசமான தொகைக்கு விற்றனர். இதற்கு ஜெயபிரசாத்தின் மனைவி ஆஷா என்கிற கலைச்செல்வி உதவினார்.மேலும், நான்சி கொடுத்த தகவலின்படி, விற்கப்பட்ட ஜோஸ்மியா என்ற எட்டு மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. ஆஷாவின் அக்கா கவிதா, சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வந்த ஆண்டாள் ஆகியோரும் சிக்கினர். மேற்கண்ட மருத்துவமனைக்கு, கடந்த எட்டு மாதத்திற்கு முன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் மனைவி அருள்மொழி மகப்பேறு சிகிச்சைக்கு வந்தார்.ஆனால், குழந்தை பெறும் வாய்ப்பை இழந்தார். அவரை சந்தித்த கவிதா, ஆண்டாள் ஆகியோர், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அழகான ஆண் குழந்தை வாங்கி கொடுப்பதாகக் கூறினார்; அவர்களும் சம்மதித்தனர்.



இதையடுத்து ஜெயபிரசாத், ஆஷா மற்றும் நான்சி மூலம் கண்ணதாசன் என்று பெயரிடப்பட்ட இரண்டு மாத குழந்தையை வாங்கிக் கொடுத்தனர்.இதையடுத்து, துரிதமாகச் செயல்பட்ட தனிப்படை போலீசார், கவிதா, நான்சி, ஆஷா என்கிற கலைச்செல்வி மற்றும் ஆண்டாள் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கண்ணதாசன் என்ற ஒரு வயது ஆண் குழந்தையையும் மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள், சென்னை பார்க் டவுனில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான ஜெயபிரசாத், கிருஷ்ணகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



சந்தேகம்: கடத்தப்பட்ட பெண் குழந்தை கிடைக்காத நிலையில், வேறு இரு குழந்தைகள் மற்றும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பெண்கள் சிக்கினர். இது, மாதவரம் தனிப்படை போலீசாருக்கு ஆறுதலாக இருந்தாலும், மாதவரம் தனியார் மருத்துவமனையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தை, கிடைக்காமல் திணறி வருகின்றனர்.விசாரணை மூலம் வரையப்பட்ட மர்மப் பெண்ணின் படமும், போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு உதவவில்லை. இந்நிலையில், உண்மையிலேயே அக்குழந்தை கடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்விரோதம் காரணமாக விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.







No comments:

Post a Comment