மேட்டூர் அருகே காதலன் வீட்டு முன், பெட்டி, படுக்கையுடன் இளம்பெண் போராட்டம் நடத்தினார்.சேலம் மாவட்டம், மேட்டூர் சதுரங்காடியை சேர்ந்தவர் நகராட்சி லாரி டிரைவர் தமிழ்வேலன். அவரது மகள் புவனேஸ்வரி (20); தனியார் மொபைல் கடையில் வேலை பார்க்கிறார்.மேட்டூர் பொன்னகரை சேர்ந்த வி.ஏ.ஓ., மணியின் மகன் பாலமுருகன் (எ) பாலாஜி; எம்.பி.ஏ., படித்துள்ள அவர், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
புவனேஸ்வரியும், பாலாஜியும் காதலித்து வந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன், பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் பெற்றோர் வீட்டில் இருந்த புவனேஸ்வரி, நேற்று காலை, தன் உடைமைகளுடன் பாலாஜி வீட்டுக்கு சென்றார். பாலாஜியின் பெற்றோர், வீட்டில் இல்லாததால், தனியாக இருந்த பாலாஜிக்கும், புவனேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டது. புவனேஸ்வரியை வெளியேற்றிய பாலாஜி, மெயின்கேட்டை பூட்டிச் சென்று விட்டார். அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி, உடைமைகளுடன் பாலாஜி வீட்டுக்கு வெளியில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார்.
புவனேஸ்வரி கூறியதாவது:இன்சூரன்ஸ் பாலிசி போடுவது சம்பந்தமாக பேச, ஒரு ஆண்டிற்கு முன் பாலாஜி, எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போதிருந்தே நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். இரு மாதங்களுக்கு முன், மேட்டூர் முனியப்பன் கோவிலில் பாலாஜி, என் கழுத்தில் தாலி கட்டினார்.திருமணத்தை பதிவு செய்வதாக கோவைக்கு அழைத்து சென்று, அங்கு என்னை அவரது ஆசைக்கு இணங்க வைத்தார். கடந்த சித்திரை முதல் தேதி, பெற்றோர் என்னை பார்க்க விரும்புவதாக கூறி வீட்டிற்கு அழைத்தார்.
நான் அங்கு சென்ற போது, அவரது பெற்றோர் இல்லை. "நாம் ஜாலியாக இருப்பதற்காகவே அழைத்தேன்' என கூறி, அன்றும் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். பலமுறை மன்றாடியும், பாலாஜியும், அவரது பெற்றோரும் என்னை அவர் வீட்டில் சேர்க்க மறுத்து விட்டனர். பாலாஜி என்னை ஏமாற்ற முயன்றதால், அவரது வீட்டுக்கு பெட்டி படுக்கையுடன் வந்து விட்டேன்.இவ்வாறு புவனேஸ்வரி கூறினார்.
அங்கு வந்த பாலாஜி கூறுகையில், "புவனேஸ்வரியை திருமணம் செய்து கொண்டதற்கோ, உறவு கொண்டதற்கோ எந்த ஆதரமும் இல்லை; வேண்டுமென்றால் போலீசில் புகார் கொடுக்கட்டும்; விசாரணையில் உண்மை தெரியும்' என்றார்.ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அமர்ந்திருந்த புவனேஸ்வரி, தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறியதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவரது பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=28885
Queries :