Sunday, May 23, 2010

பணத்துக்காக மூதாட்டி கொலை:இளம்பெண், கள்ளக்காதலன் கைது

பணத்துக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த ராமனாதிச்சன்புதூரைச் சேர்ந்தவர் சிலுவைதாசன்(80); இவரது மனைவி ஞானப்பிரகாசி(58). இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.மகள்களை திருமணம் செய்து கொடுத்ததில் கடன் பட்டிருந்த சிலுவைதாசன், மகள் சுதாவின் தோழி அமுதா என்பவர் வழியாக ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் வீட்டுப்பத்திரத்தை அடமானமாக வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.ஆனால், பணத்தை சிலுவைதாசனிடம் கொடுக்காமல் அமுதா இழுத்தடித்துள்ளார்.



சம்பவத்தன்று பணம் கேட்க சென்ற சிலுவைதாசன் மற்றும் ஞானப்பிரகாசியை பல இடங்களுக்கும் அமுதா ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார்.கூடவே, அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜு என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். ஒழுகினசேரி ரயில்வே பாலம் அருகில் சென்றதும் இருவரையும் அமுதா பிடித்து கொண்டார். மாணிக்கராஜு கத்தியால் குத்தியுள்ளார். இருவரும் இறந்து விட்டதாக நினைத்து விட்டு சென்றுவிட்டனர்; ஞானபிரகாசி இறந்துவிட்டார்.



சிலுவைராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அமுதா எதுவும் தெரியாதது போல் அங்கு சென்றுள்ளார். அமுதாவை பார்த்ததும் சிலுவைராஜன் சைகையில் எதுவோ சொல்ல உறவினர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அமுதா, பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார்.கணவர் சிவலிங்கம் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், மாணிக்கராஜுவுடன் அமுதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றியதால் ஏற்பட்ட கடனை அடைக்க சிலுவைதாசனிடம் பணத்தை அபகரிக்க முடிவு செய்துள்ளனர்.



முதலில் பணத்தை கொடுத்து விட்டு மாணிக்கராஜு மூலம் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளனர். பின்னர், கொலை செய்ததாக அமுதா போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மாணிக்காராஜுவும் கைது செய்யப்பட்டார். மாணிக்கராஜு மீது ஏற்கனவே 12 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.




http://www.dinamalar.com/News_Detail.asp?Id=5028


No comments:

Post a Comment