சென்னை மாநகர போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகரை, விசாரணைக்கு அழைத்து தலைமை செயலக ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோதி (55). இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில், டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை, தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பஸ் நிறுத்தத்தில், ஜோதி மற்றும் அவருடன் பணியாற்றும் பஞ்சாட்சரம், பாண்டியன் ஆகிய மூவரும் பஸ்களை நிறுத்தி, டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.
காலை 9:30 மணியளவில், திருப்போரூரிலிருந்து பிராட்வே செல்லும் தடம் எண் 521 பஸ், அந்த பஸ் நிறுத்தம் வந்தது. வழக்கம் போல் ஜோதி உள்ளிட்ட மூவரும் அந்த பஸ்சில் ஏறி, டிக்கெட் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் பயணித்த, தலைமை செயலக பணியாளர்கள் நான்கு பேர், டிக்கெட் பரிசோதகர்களிடம், ''பீக் அவர்சில் ஏன் இப்படி பஸ்சை நிறுத்துகிறீர்கள்?'' என்று கூறியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், டிக்கெட் பரிசோதகர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியர், தன்னை தலைமை செயலரின் உதவியாளர் என்று கூறினார். பஸ்சை விட்டு பரிசோதகர்கள் இறங்கி விட, பஸ் கிளம்பியது. இதன்பின், டிக்கெட் பரிசோதகர் ஜோதியை அழைத்த மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், தலைமை செயலகத்திற்கு செல்லுமாறும், அங்கு விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜோதி, சக ஊழியர்களுடன், தலைமை செயலகம் சென்றார். தலைமை செயலர் அறையில் விசாரணை முடிந்து திரும்பிய போது, அந்த அறை வாசலில் நின்ற, டபேதார்கள் இருவர் மற்றும் பஸ்சில் வந்த ஊழியர் ஆகிய மூவரும் சேர்ந்து, டிக்கெட் பரிசோதகரை தாக்கியதுடன், அவரை கீழே தள்ளி மிதித்ததாக கூறப்படுகிறது.
இதில், ஜோதிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமடைந்தார். உடன் சென்றவர்கள், அவரை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமை செயலக போலீசில், இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தலைமை செயலர் அறைமுன்பு நடந்த இந்த தாக்குதல் சம்பவம், போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை செய்யும் போது, மற்றொரு அரசு ஊழியர் ஒத்துழைப்பு அளிக்காததுடன், அவரை தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18470
No comments:
Post a Comment