சேலம் அருகே மயக்க ஊசி போட்டு கணவனை சித்ரவதைக்கு ஆளாக்கியதுடன், உறவினர்களுடன் சேர்ந்து வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய டாக்டரின் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம் காகாபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(41); லேப்ராஸ்கோபி டாக்டர். அவரது மனைவி சித்ரா(44); மகப்பேறு டாக்டர். இவர்களது மகன் நவீன்(16)
காகாபாளையத்தில் சி.கே., மருத்துவமனையை சித்ரா நடத்தி வந்தார். இடைப்பாடியில் நவீன் மருத்துவமனையை கண்ணன் பார்த்து வந்தார். பிரபல மருத்துவமனைகளில் ஆபரேஷன் பணிக்கும் அவர் சென்று வந்தார்.கடந்த 18 ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்த டாக்டர் தம்பதிகளிடையே கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டது.
இது விவாகரத்து வரை சென்றது. பின் பெற்றோர், உறவினர்கள் தலையீட்டால் பிரித்து வாழ்ந்த தம்பதியர், இரண்டு மாதமாக சேர்ந்து வாழ்ந்தனர்.அவர்கள் வாழ்வில் சொத்துப் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்தது. கண்ணன் பெயரில் உள்ள சொத்துக்களை, தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என, சித்ரா பிரச்னை செய்துள்ளார்
இதற்கு அவர்களது உறவினர்களும் ஆதரவாக இருந்துள்ளனர்.கடந்த 24ம் தேதி வீட்டுக்கு வந்த கண்ணனை, மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் தனி அறையில் கட்டி வைத்து மயக்க ஊசி போட்டு சித்ரவதை செய்து வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர். உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த கண்ணனை, அவரது மாமா மீட்டு சேலம் தரண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அதைத் தொடர்ந்து, மகுடஞ்சாவடி போலீசாரிடம் டாக்டர்கண்ணன் அளித்தபுகார் விவரம்: ஐந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்த சொத்து சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவிக்கும், எனக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று வாழப்பாடி சென்று விட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்ட பின், மனைவி அறைக்கு சென்றேன்.
அப்போது திடீரென லேப் டெக்னீஷியன் மகாதேவன், சித்ராவின் தம்பி கோபு, என் சகலை பாலசுப்பிரமணியம், சித்ராவின் அக்கா விஜயலட்சுமி, கோபுவின் மனைவி விமலா மற்றும் என்னுடைய மனைவி சித்ரா ஆகியோர் என்னை பிடித்து எலக்ட்ரிக் ஒயரால் கைகளையும், கால்களையும் கட்டி, அடித்து படுக்கையில் முகத்தை அமுக்கி, அதிகப்படியான மயக்க மருந்து மூலம் இடுப்பில் ஊசி போட்டனர்.
இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஐந்து முறை மயக்க ஊசி போட்டனர். சித்ரா என்னிடம் வந்து, 'எங்கப்பா பத்திரங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அதில் நான் கையெழுத்து போட்டு சொத்துக்களை அவர் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் ஊசி போட்டு கொலை செய்து விட்டு, நீயே தற்கொலை செய்து கொண்டதாக கூறி விடுவேன்' என, மிரட்டினார்.உயிருக்கு பயந்து நானும் எழுதிய பத்திரம், எழுதாத பத்திரங்களில் கையெழுத்து போட்டேன்.
அதன் பிறகு மயக்க ஊசி போட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு அறையில் அடைத்து விட்டனர். மயக்கம் தெளிந்து, 'காப்பாற்றுங்கள்' என்று கத்தினேன். என் மாமா வந்து என்னை மீட்டு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் என கூறினார். அதன்படி தரண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கூறுகையில், ''டாக்டர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் அவரது மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர்; தேடி வருகிறோம். இன்று புகார் அளிப்பவர்கள், பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம் என்று வருவர். சித்ராவிடம் விசாரணை நடத்தினால், உண்மை நிலை தெரியவரும்,'' என்றார்.
இந்த சம்பவத்துக்கு பின், சித்ரா மற்றும் அவருடன் இருந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற அவர்கள் முயற்சித்ததாகவும், அந்த மனு தள்ளுபடியானதால், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டுமனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment