'ரவுடி கும்பலால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய எனது மகனை காப்பாற்றுமாறு, சம்பவ இடத்திலிருந்த போலீஸ் அதிகாரிகளின் காலில் விழுந்து மன்றாடினேன்; உதவமறுத்த போலீசார், என்னை கன்னத்தில் அறைந்து ஜீப்பில் ஏற்றினர். ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்,' என, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் ரயில்வே அதிகாரி கண்ணீர் விட்டு அழுதார்.
கோவை, பீளமேடு, விளாங்குறிச்சி, ராகவேந்திரா அவென்யூவைச் சேர்ந்தவர் மேகநாதன்(58); ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றுகிறார். இவரது மகன் பிரகாஷ் கிருஷ்ணன்(27); பீளமேடு சி.ஐ.டி.,கல்லூரியில் பகுதி நேர பி.இ., இறுதியாண்டு படிக்கிறார். இவர், கடந்த 6ம் தேதி இரவு, மசக்காளிபாளையம் ரோட்டிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடை 'பார்'ல் இருந்தார். அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு, 10 பேர் கும்பல் இவரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியது. உயிர்பிழைக்க மசக்காளிபாளையம் ரோட்டில் அரை கி.மீ.,தொலைவுக்கு ஓடியும் விடாமல் துரத்திச் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரோந்து போலீஸ்காரர் ரமேசையும், கும்பல் கீழே தள்ளிவிட்டது. இவர் அவசர உதவிகோரி பீளமேடு போலீசாரை போனில் தொடர்பு கொண்ட போது, எல்லை பிரச்னையை காரணம் காட்டி, போலீசாரை அனுப்ப மறுத்து விட்டனர். தாமதமாக வந்த பீளமேடு எஸ்.ஐ.,முத்துசாமி, சிங்காநல்லூர் எஸ்.ஐ., பிரபாவதியும் ரவுடிக் கும்பலை கைது செய்யவில்லை. பொதுமக்களின் வற்புறுத்தலை தொடர்ந்து ரவுடிக் கும்பலை பிடித்தனர். பின்னர், இன்ஸ்பெக்டர் ஒருவரின் உத்தரவையடுத்து, ரவுடிக் கும்பலை விடுவித்தனர்.
அதுவரை, தலையில் ரத்தம் வழிய உயிருக்கு போராடிய பிரகாஷ்கிருஷ்ணனை, சம்பவ இடத்துக்கு வந்த அவரது தந்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். எனினும், கொலைவெறி தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் சிங்காநல்லூர் போலீசார் மூடிமறைத்தனர். கமிஷனர் அலுவலகத்துக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்த விரிவான செய்தி, 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, அதிரடி விசாரணையை துவக்கிய கமிஷனர் சைலேந்திரபாபு, தாக்குதலில் காயமடைந்த பிரகாஷ் கிருஷ்ணன், அவரது தந்தை மேகநாதன், தாக்குதலின் போது சம்பவ இடத்தில் இருந்த ரோந்து போலீஸ்காரர் ரமேஷ், கடமையைச் செய்ய தவறிய போலீஸ் அதிகாரிகளை அழைத்து நேற்று விசாரணை நடத்தினார்.
போலீசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ரவுடிக் கும்பலுக்கு சாதகமாக செயல்பட்ட போலீசாரை கடுமையாக எச்சரித்த கமிஷனர், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். ரவுடிக் கும்பலுக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார், அதிகாரிகள் மீது துறைசார்ந்த விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். மாணவர் பிரகாஷ் கிருஷ்ணனிடம் நேற்று புகார் பெற்ற சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதமன், வழக்குப்பதிவு செய்தார்.
ரவுடிக் கும்பலிடம் உயிர்தப்பிய பிரகாஷ் கிருஷ்ணனின், தந்தை மேகநாதன் கூறியதாவது: எனது மகன் தாக்கப்பட்ட போது, நான் வீட்டில் இருந்தேன். சம்பவம் பற்றி கேள்விப்பட்டு அங்கு விரைந்த போது, எனது மகன் தலையில் அடிபட்டு, ரத்தம் வழிய தரையில் கிடந்தபடி உயிருக்கு போராடினான். அருகில், ஆண் எஸ்.ஐ.,யும், பெண் எஸ்.ஐ.,யும் சில போலீசாரும் நின்றிருந்தனர். அடித்த கும்பலும் ஆக்ரோஷம் தீராமல் நின்றிருந்தது. எனது மகனை காப்பாற்றக்கோரி, போலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரின் காலிலும் அடுத்தடுத்து விழுந்தேன். நான் ரயில்வேயில் வேலை பார்க்கிறேன் என்றும் கூறினேன். 'என்னய்யா, புள்ளய இப்படியா வளர்க்கிறது...' எனக் கேட்டபடி ஒரு போலீஸ்காரர், என் கன்னத்தில் பளார், பளார் என இரண்டு முறை அடித்தார். கொலைவெறி தாக்குதல் நடத்திய ரவுடிக் கும்பல் சுற்றிநின்று வேடிக்கை பார்க்க, போலீசாரால் நானும் தாக்கப்பட்டேன். அதன் பின், எனது மகனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தேன். ரவுடிக்கும்பலுக்கு சாதகமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள், என்னை தாக்கிய போலீஸ்காரர் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். இவ்வாறு, மேகநாதன் தெரிவித்தார்.
தாக்குதலுக்குள்ளான பிரகாஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''ரவுடிக்கும்பலிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ முயன்றும் விடாமல் மூர்க்கத்தனமாக தாக்கினர். அருகிலிருந்த சிலர் தடுத்தும் கூட, தாக்குதலை நிறுத்தவில்லை; நான் உயிர்பிழைத்தது, ஆண்டவன் செயல்,'' என்றார். சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதமன் கூறுகையில், ''தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்துவிடுவோம்,'' என்றார்.
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7472
No comments:
Post a Comment