Thursday, June 3, 2010

தாயாரின் கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்து புதைத்த சிறுவன் கைது


விருதுநகர் அருகே, தாயாரின் கள்ளக்காதலனின், இரண்டு வயது குழந்தையை கொலை செய்து, கழிப்பறையில் புதைத்த, சிறுவன் சந்திவீரனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகேயுள்ள, குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). ஆடு மேய்க்கும், வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஜோதிசங்கர் (2) என்ற குழந்தை இருந்தது. இவர்களது, பக்கத்து வீட்டில் வசிப்பவர் மருதன். இவரது மகன் சந்திவீரன் (15), கடந்த ஆண்டு, பள்ளியில் படித்த, சகமாணவர் சதீஷ்குமார் என்பவரை, கடந்த ஆண்டு கொலை செய்த வழக்கில், சிறுவர் சீர்திருத்த பள்ளியில், அடைக்கப்பட்டிருந்தார். இவர் சமீபத்தில், வீட்டுக்கு வந்திருந்தார் . நேற்று முன்தினம், அழகம்மாள், ஆட்டுக்கு குலை பறிக்க செல்லும் போது, அவரது குழந்தையை பார்த்து கொள்ளுமாறு, சந்திவீரனிடம் (15) கூறி சென்றார்.

திரும்பி வந்த போது, குழந்தையை காணவில்லை. பல இடங்களில் தேடியும், பலனில்லாததால் ஆமத்தூர் போலீசில், கணேசன் புகார் செய்தார். போலீசார், சந்திவீரனிடம் விசாரித்தனர். அப்போது அழகம்மாள், வீட்டு வாசல்படியில் ஒரு கடிதம் இருந்தது. அதில், குழந்தை வேண்டுமென்றால், 30 லட்ச ரூபாயை, திருமங்கலத்தில் வந்து கொடுத்துவிட்டு, குழந்தையை கன்னியாகுமரிக்கு வந்து, பெற்று கொள்ளவுமென எழுதப்பட்டிருந்தது. போலீசார் சந்தேகப்பட்டு, சந்திவீரனை எழுத சொல்லி பார்த்தபோது, அவரது கையெழுத்தும், கடிதத்திலிருந்த கையெழுத்தும் ஒன்றாக இருந்தது. அவனிடம் விசாரித்தபோது, குழந்தையை கொலை செய்து, தனது வீட்டு கழிப்பறையில், புதைத்திருப்பதை ஒப்பு கொண்டான். போலீசார், கழிப்பறையை தோண்டி பார்த்த போது, குழந்தை ஒரு சாக்குப்பையில் கட்டப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது. குழந்தையின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக, விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சந்திவீரன் கூறியிருப்பதாவது: என் தாயார் ராமலட்சுமிக்கும், கணேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை, பார்த்து விட்டேன். இதை அழகம்மாளிடம் தெரிவித்து, கணவரை கண்டிக்குமாறு கூறியும், அவர் கண்டு கொள்ளவில்லை. அதனால் கணேசனை, கொலை செய்ய திட்டமிட்டேன். மே 25ம் தேதி, அரளி விதை சாறு தயார் செய்து, ஒரு பாட்டிலில் எடுத்துக் கொண்டு, கணேசன் வீட்டிற்கு சென்றேன். கணேசனுக்கு, சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு, அழகம்மாள் வெளியே சென்றார். நான் சைக்கிளில், காற்று அடிக்க பம்பு எடுக்கும் சாக்கில், அந்த வீட்டிற்குள் சென்று, அவருக்காக வைத்திருந்த சாப்பாட்டில், அரளி விதை சாறை ஊற்றிவிட்டு, ஓடி வந்து விட்டேன். பின்னர் கணவன், மனைவிக்கு வாய்தகராறு ஏற்பட்டதில், கணேசன் கோபத்தில், சாப்பிடாமல் வெளியே சென்றுவிட்டதால், எனது திட்டம் நிறைவேறவில்லை. இதில் இருந்தே, கணேசனை பழி வாங்குவதற்காக, அவரது மகனை, கொலை செய்ய திட்டம் தீட்டினேன். அப்போது தான், குழந்தையை பார்த்து கொள்ளுமாறு, அழகம்மாள் கூறியதையடுத்து, கொலையை அன்றே செய்ய முடிவு செய்தேன். எனது வீட்டு "செப்டிக் டேங்க்' இருந்த இடத்தில், குழியை ஆழப்படுத்தினேன்.

ஒரு கடையில், வெள்ளைத்தாள் வாங்கி, முதலில் மிரட்டல் கடிதம் எழுதினேன். இது திருப்தி அளிக்காததால், மீண்டும் எழுதிய கடிதத்திலேயே, குழந்தை வேண்டுமென்றால், 30 லட்ச ரூபாயை திருமங்கலத்தில் வந்து கொடுத்து விட்டு, குழந்தையை கன்னியாகுமரியில், பெற்று கொள்ளவுமென குறிப்பிட்டு, அவரது வீட்டு படியில், கடிதத்தை போட்டேன். விளையாடி கொண்டிருந்த, ஜோதி சங்கரனின் கழுத்தை இறுக்கி, கொலை செய்து, பிணத்தை உரச்சாக்கில் போட்டேன். சாக்குடன் குழந்தையை, எனது வீட்டு "செப்டிக் டேங்க்' குழியில், போட்டு மூடினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இக்கொலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாமென, நேற்று முன்தினம் இரவு, குமாரலிங்கபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட, அதே ஊரை சேர்ந்த, 50 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.




No comments:

Post a Comment