Tuesday, September 7, 2010

மொபைல் போனில் கூலாக பேசி காதலில் விழ வைக்கும் பெண்கள்



மொபைல் போனில் பொழுதுபோக்காக வாலிபர்களிடம் பேசி, காதலில் விழ அலைய வைக்கும் பெண்கள் மீது வரும் புகாரின் எண்ணிக்கை கூடி வருவதாக, கோவை சைபர் க்ரைம் போலீசார் "அதிர்ச்சி' தகவல் தெரிவிக்கின்றனர்.


கோவை மாநகர குற்றப்பிரிவின் கீழ் செயல்படும், "சைபர் க்ரைம்' பிரிவுக்கு வரும் புகார்களில், மொபைல்போன் மூலம் ஆபாச அழைப்பு விடுத்தல், "செக்ஸ் மெசேஜ்' மற்றும் ஆபாச படங்கள் அனுப்பி, "டார்ச்சர்' கொடுப்பது தான் அதிகம்.பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மட்டுமன்றி, முன் பின் அறிமுகமில்லாத மாணவியர், வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்களுக்கும் அனுப்பி தங்களுக்குள் சந்தோஷம் கொள்கின்றனர்.தொடர்ந்து பெறப்படும் ஆபாச அழைப்புகளால் மனவேதனை அடையும் பெண்கள், மாணவியர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தரும் புகாரின் எண்ணிக்கை கூடியுள்ளன.சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, "டார்ச்சர்' கொடுக்கும் ஆசாமிகளை வளைத்து பிடிக்கின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜாலிக்காகவும், ஆர்வ கோளாறு காரணமாகவும் மெசேஜ் அனுப்புவதாகக் கூறி, மன்னிப்பு கேட்டு மன்றாடி தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த 160க்கும் மேற்பட்ட புகார்கள், புகார்தாரரின் வேண்டுகோளின்படி எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இவற்றில், போலீசாரையே திடுக்கிட வைத்துள்ள சில சம்பவங்களும் நடந்துள்ளன. முன் பின் பார்த்திராத வாலிபரை காதல் வலையில் விழ வைத்த திருமணமான பெண், தங்கைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய அக்கா, ஒருதலைக் காதல் வசப்பட்டு, ஆபாச மெசேஜ் அனுப்பிய தனியார் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஆகியோரை, சைபர் க்ரைம் போலீசார் பிடித்துள்ளனர்.


கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பெற்றோருடன் வசிக்கிறார். தனக்கு தெரிந்த வாலிபர் ராகுலுடன் (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மொபைல் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு குழையக் குழைய பேசியுள்ளார். அவளது பேச்சில் தன்னை பறிகொடுத்த வாலிபர், நேரில் சந்திக்க வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பிடி கொடுக்காமல் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என காலம் கடத்தியுள்ளார். தன்னுடன் பேசுவது யார் என்று தெரிந்து கொள்ளாமலே காதலில் விழுந்த வாலிபர், திருமணம் செய்தே ஆக வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றுள்ளார். இதை உறுதி செய்த ஸ்வீட்டி தன்னை பெண் பார்க்க வருமாறு சென்னைக்கு அழைத்துள்ளார்.


ஆர்வத்தில் தன் பெற்றோரையும், பக்கத்து வீட்டு நண்பரின் பெற்றோரையும் சென்னை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற போது, ஸ்வீட்டியின் தோழி ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, "ஸ்வீட்டிக்கு உடல் நலமில்லை. அவளது தோழி வீட்டில் இருக்கிறார். பெண் பார்க்கும் நிகழ்ச்சியை இன்னொரு நாளைக்கு வைத்து கொள்ளலாம்' என்று தெரிவிக்க, ராகுல் மற்றும் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் கோவை திரும்பினார்.


அடுத்தடுத்து அவள் யார் என்று தெரிந்து கொள்ள ராகுல் பல முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. சில மாதங்களுக்கு முன், சூலூர் போலீசுக்கு வந்த போனில், தனது பெயர் ஸ்வீட்டி என்றும், தன்னை காதலிக்கும் ராகுல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் புகார் செய்ததோடு, தன் காதலனின் மெபைல் எண்ணையும் கொடுத்து இணைப்பை துண்டித்து விட்டாள். போலீசார் விசாரித்ததில் ஸ்வீட்டி கொடுத்த மொபைல் எண்ணுக்கு, சொந்தக்காரர் காதலில் விழுந்த வாலிபர் தான் என தெரிந்தது. ஆத்திரமடைந்த ராகுல், "அவள் யாரென்று தெரியாது. முன் பின் முகத்தை பார்த்ததில்லை. ஆனால், என்னை காதலிப்பதாக கூறி அலைய விட்டு அசிங்கப்படுத்தி விட்டாள். அவளை கண்டுபிடித்து கொடுங்கள்' என, புகார் தெரிவித்துள்ளார்.இது சைபர் க்ரைம் விசாரணைக்கு வந்தது. தீவிர தேடுதலில் ஸ்வீட்டி சிக்கினாள். அவள் வேறு யாருமல்ல. காதலில் விழுந்த ராகுலின் பக்கத்து வீட்டு குடும்ப நண்பரின் மருமகள்; திருமணமானவர். மேலும், அப்பெண்ணிடம் 10 சிம்கார்டுகள் இருந்ததாகவும், ஒவ்வொரு முறை பேசும் போதும் வெவ்வேறு எண்களில் இருந்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.காதலில் ஆண்கள் எப்படி விழுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள, ஜாலிக்காக இதில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இரு வீட்டாரும் கேட்டுக் கொண்டதால் வழக்குப் பதிவு செய்யவில்லை.


மற்றொரு வழக்கு: மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் விற்பனை மையத்தில் வேலை. இவரது கடைக்கு பொருள் வாங்க வரும் வாலிபரும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தான். இவரது மொபைல் போனை தெரிந்து கொண்ட செல்வி, தொடர்ந்து போன் செய்து, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.காதல் மெசேஜ், ஆபாச படங்களுடன் கூடிய மெசேஜை தொடர்ந்து அனுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர், சைபர் க்ரைமில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்ததில் செல்வி பிடிபட்டார். விசாரணையில், தினமும் ஒரே பஸ்சில் பயணிக்கும் வாலிபரின் அழகை ரசிப்பதற்காகவே இச்செய்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். வாலிபரின் வேண்டுகோள் காரணமாக செல்வி மன்னிக்கப்பட்டாள்.
இதை விட, மிக மோசமான, தரமில்லாத மெசேஜ் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வந்ததால், மனநிம்மதி இழந்த ஒரு பெண், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்தனர். அந்த வீட்டில் அக்கா, தங்கை இருவர். தங்கை அழகானவர். இதனால் ஆபாச படங்கள், ஆபாச அழைப்புகள் தங்கைக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து பார்த்த போது, அக்காவே தங்கைக்கு மெசேஜ் அனுப்பியது தெரிந்தது. விசாரணையில் பொறாமை தான் காரணம் என தெரிய வந்தது. இதுவும் சமாதானத்தில் முடிந்துள்ளது.


தற்போதைய சூழலில் ஆண்களுக்கு நிகராக, மொபைல் போனில் மெசேஜ், ஆபாச அழைப்பு விடுத்து பெண்களும் சிக்கிக் கொள்கின்றனர் என்பது வெளிப்படையாக நடக்கிறது. போலீசுக்கு வரும் புகார் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment