Thursday, July 29, 2010

லஞ்சப்புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் வீடியோவில் பதிவான பரபரப்பு காட்சிகள்

லஞ்சப்புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் வீடியோவில் பதிவான பரபரப்பு காட்சிகள்



திருப்பூரில், போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் இந்திராணி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது வீடியோ பதிவு காட்சிகளில் அம்பலமாகியுள்ளது; அதில், இன்ஸ்பெக்டர் இந்திராணி, பணம் பெற்றதை அவராகவே ஒப்புக்கொண்டு வாக்குமூலம் தருவது காட்சிகளில் பதிவாகியுள்ளது.


உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி; திருப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பு வகித்தார். கடந்த 23ம் தேதி மதியம், கரட்டாங்காடு பஸ் ஸ்டாப்பில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைக்குச் சென்ற அவர், அக்கடை உரிமையாளர் சரவணனிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.அதை "வீடியோ'வில் பதிவு செய்ததாக "வீடியோ' சுப்ரமணியம் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


இவ்வழக்கு தொடர்பான விசாரணையில், "இன்ஸ்பெக்டர் இந்திராணி லஞ்சம் பெறவில்லை எனவும், மொபைல் போன் பழுதை சரிபார்க்கவே எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றதாகவும்,' திருப்பூர் டி.எஸ்.பி., ராஜா கூறினார். இருப்பினும், இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கினாரா என்பதை விசாரிக்க, ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கூடுதல் பொறுப்பில் இருந்து இந்திராணி விடுவிக்கப்பட்டு, உடுமலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.


இந்நிலையில், பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் ஊடகங்களுக்கு "வீடியோ' சுப்ரமணியம், இன்ஸ்பெக்டர் இந்திராணி லஞ்சம் பெற்றபோது எடுத்த வீடியோ காட்சிகள் அடங்கிய "சிடி' நேற்று கிடைத்தது. அதில், "வீடியோ' சுப்ரமணியத்தின் குரலும், இன்ஸ்பெக்டர் பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மொத்தம் மூன்று பைல்கள் இருந்தன. முதல் பைலில் 26 வினாடிகள் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இன்ஸ்பெக்டர் இந்திராணி எலக்டரிக்கல் கடைக்குள் நின்று கொண்டு பேசுகிறார்.


அதன் விவரம்:
ஆண் குரல் (சுப்ரமணியம்): கவர் போட்டு எதுக்காக, நீங்க பணம் வாங்குனீங்க? இந்த பணம் யார், யாருக்கெல்லாம் போகுது?
இந்திராணி: இல்லீங்க, அதுவந்து...
ஆண் குரல்: உண்மையைச் சொன்னா விட்டுருவேன். உண்மையைச் சொல்லுங்க. மன்னிப்பு வேற கேட்டுருக்கீங்க. உண்மையை சொல்லுங்க.
இந்திராணி: யாருக்கும் தரலைங்க; டிரைவருக்கு தரத் தான் பணம் வாங்கினேன். வேண்டாம். தயவு செய்து இதை எடுக்காதீங்க. என்னை விட்டுருங்க. (அழுகிறார்)
ஆண் குரல்: காலை தொட்டு கும்பிட்டு கேட்கறீங்க. லேடீசா வேற இருக்கீங்க? எதுக்காக, லஞ்சம் வாங்கனீங்க?
(இத்துடன் முதல் காட்சி முடிகிறது)


இரண்டாவது பைலில் 48 வினாடிகள் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஆண் குரல்: பிரபாவதி வழக்கில் இவரை (சரவணனை) என்னவா போட்டிருக்கீங்க?
இந்திராணி: சாட்சியா போட்டிருக்கோம்.
ஆண் குரல்: அதாவது, சாட்சியமா போட்டிருக்கீங்க. இவர் சம்பவத்தை நேரில் பார்த்தாரா? இவரை எதுக்காக சாட்சியமா போட்டீங்க?
இந்திராணி: இவரை எனக்கு தெரியாதுங்க. எஸ்.ஐ., ரமா மூலமா தான் இவரை வழக்குல சேர்த்தோம். இவரை நான் முன்ன பின்ன பார்த்தது இல்லை.
ஆண் குரல்: பிரபாவதி வழக்குல இவரு சாட்சியா வந்து என்ன சொல்லணும்?
(இத்துடன் இரண்டாவது பைலில் இருந்த காட்சிகள் முடிகின்றன)


மூன்றாவது பைலில் மொத்தம் 3.16 வினாடிகள் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் "வீடியோ' சுப்ரமணியம், போனில் பேசுகிறார்.
"வணக்கம் சார். நான் "வீடியோ' சுப்ரமணியம் பேசுறேன்.
எதிர்முனையில் சவுத் போலீஸ் ஸ்டேஷன் சார் என குரல் கேட்கிறது.
ஆண் குரல்: பெரிச்சிபாளையம் பஸ் ஸ்டாப் பக்கத்துல இருந்து பேசறேன். இங்க, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேடம் இந்திராணி, ஒருத்தரை மிரட்டி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கவர்ல வாங்கி, பாக்கெட்டுல வைச்சிட்டாங்க. விசாரணைக்கு அழைக்க மாட்டேன்னு சொல்லி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்காங்க. அதை நான் வீடியோ எடுத்திருக்கேன். ஒரு மணி நேரமாச்சு. இதை உயரதிகாரிகள் கிட்ட சொல்லுங்கன்னா, சொல்ல மாட்டேன்னு சொல்லி அழறாங்க. காலை தொட்டு தொட்டு கும்பிடறாங்க... என பேசுகிறார்.
இதற்கு, போலீசார் வர்றாங்க என போனில் பேசுபவர் சொல்ல... யாரும் வரலை. பஸ் ஸ்டாப் பக்கத்துல வர சொல்லுங்க, என சொல்லும்போது, 407 வண்டி வருது என, அக்குரலே சொல்கிறது.ரோட்டில் நிற்கும் வேனில் இருந்து போலீசார் சிலர் இறங்கி வருகின்றனர். கடைக்குள் செல்கின்றனர். அங்கிருந்த இந்திராணியை, நீங்க வண்டிக்கு போங்க மேடம் என ஒரு போலீஸ்காரர் சொல்கிறார். அப்போது, "வீடியோ' சுப்ரமணியத்திடம் இருந்து மொபைல் போன் பறிக்கப்படுவது போலவும், அவரை போலீசார் பிடித்துக் கொள்வது போலவும் காட்சிகள் எதுவுமின்றி, "வீடியோ' சுப்ரமணியம் குரல் மட்டுமே ஒலிக்கிறது.இதில், "எல்லாம் தர்றேன். போலாம், எங்க வேணாலும் வர்றேன். எந்த வண்டியில் ஏறணும்? என்ன வேணா நீங்க பண்ணலாம். ஆனா, கடவுள்னு ஒருத்தர் இருக்கார். எல்லாத்தையும் வீடியோ எடுத்திருக்கேன். லஞ்சம் வாங்கிய அதிகாரியை "வீடியோ' எடுத்த நான் குற்றவாளியா? நல்லா கேட்டுக்குங்க எல்லாரும்' என, ஒலிக்கிறது. அதன்பின், சைரன் ஒலியுடன் வீடியோ காட்சி நிறைவடைகிறது. இதில், கடைக்குள் எடுக்கப்பட்ட காட்சிகளும், ரோட்டில் போலீசார் வரும் காட்சிகளும், கடைவீதியில், ரோட்டில் உள்ள சத்தங்களும் இக்காட்சியில் தெளிவாக உள்ளது. காட்சிகளும், கடை வீதியில், ரோட்டில் உள்ள சத்தங்களும் இந்த வீடியோ பதிவில் தெளிவாக கேட்கிறது.



எஸ்.பி., அருண், நிருபர்களிடம் கூறியதாவது: இன்ஸ்பெக்டர் இந்திராணி லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோக்களை நானும் பார்த்தேன். அதில், சில காட்சிகளும், சிலரது பேச்சும் பதிவாகி உள்ளது. இதை, தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இன்ஸ்பெக்டர் இந்திராணி மீதான லஞ்சப்புகார் குறித்து விசாரிக்க ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் லஞ்சம் வாங்கியது உண்மை என விசாரணையில் தெரியவந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில், அவரது செயலை நியாயப்படுத்த முடியாது. அதேநேரத்தில் தவறு செய்தவர்களை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் வாங்குவதும் தவறுஇந்திராணி பணம் பெற்றதாக கூறப்படும் காட்சிகள், ஆடியோ (ஒலிப்பதிவு)வாக மட்டுமே உள்ளன. ஒலிக்கும் குரல் இந்திராணியின் குரல் என உறுதியாக கூற முடியாது.


ஆடியோ "மிக்சிங்' முறையில் ஒருவரது குரலில் வேறு ஒருவர் பேசும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அந்த வீடியோவில் இந்திராணிக்கு பணம் கொடுப்பது போலவும், அவர் பணத்தை பெற்றுக் கொள்வது போலவும் எந்த காட்சியும் இல்லை. ஒலிக்கும் குரல்களும், உண்மையாக நடந்த சம்பவங்களின் போது பேசப்பட்டவையா என விசாரணையின் முடிவில் தெரியவரும். உண்மை தெரியவரும் போது, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்.பி., தெரிவித்தார்.


No comments:

Post a Comment