Tuesday, July 20, 2010

கள்ளக்காதலியின் வெறிச்செயல் அம்பலம்

சென்னையில் காணாமல் போய், சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் ஆதித்யாவை, அவனது தந்தையின் கள்ளக்காதலி பூவரசியே கொன்று சூட்கேசில் எடுத்துச் சென்று நாகப்பட்டினத்தில் வீசியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூவரசியை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, விருகம்பாக்கம் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (எ) அனந்த லட்சுமி (30). இவர்களுக்கு நிவேதா (6) என்ற மகளும், மூன்றரை வயதில் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த திருவலம் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசி (26). எம்.எஸ்சி., பட்டதாரியான இவர், ஜெயக்குமார் பணியாற்றும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜெயக்குமாரும், பூவரசியும் முன்னரே, சென்னையில் வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய போது நெருக்கம் ஏற்பட்டு, கள்ளத் தொடர்பாக வளர்ந்தது. பூவரசியை, வேப்பேரியில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ., விடுதியில் ஜெயக்குமார் தங்க வைத்தார். இதை அறியாத ஆனந்தியும், அவரது குழந்தைகளும், பூவரசியிடம் நெருக்கமாக பழகினர்.

ஜெயக்குமார் அடிக்கடி தனது மகன் ஆதித்யாவை அலுவலகத்திற்கு அழைத்து வரும் போது, பூவரசி தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த சனிக்கிழமை 17ம் தேதி வழக்கம் போல் ஆதித்யா, அலுவலகம் வந்த போது, அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஆண்டர்சன் சர்ச்சில் விழா நடப்பதாகவும், அங்கு ஆதித்யாவை அழைத்துச் செல்வதாகவும் பூவரசி கூறினார். தொடர்ந்து, ஜெயக்குமார், ஆதித்யாவை பூவரசியுடன் அனுப்பி வைத்தார். அன்று மாலை 6 மணிக்கு தனது மகன் ஆதித்யாவை காணவில்லை என்று எஸ்பிளனேடு போலீசில் ஜெயக்குமார் புகார் அளித்தார். விசாரணையில், தனது மகனை, நண்பியான பூவரசியுடன் அனுப்பியதாகவும், அவர் சர்ச்சில் மயங்கி விழுந்த போது மகனை காணவில்லை என்றும் கூறியிருந்தார்.


தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த பூவரசியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரும் அப்படியே கூறியதால், மறுநாள் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். மறுநாள் காலை போலீசும், ஜெயக்குமாரும் தொடர்பு கொண்ட போது, பூவரசியின் மொபைல் "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் இணைப்பு கிடைத்த நிலையில், போலீசார் மீண்டும் பூவரசியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகை மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் சூட்கேசில் இறந்த நிலையில் சிறுவன் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த படத்தை வைத்து கேட்ட போது ஜெயக்குமாரும், பூவரசியும் மறுத்துவிட்டனர். ஆனால், ஆனந்திக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் அடையாளம் காட்ட நாகைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு சென்ற ஆனந்தி, சூட்கேசில் இருந்த சிறுவன் உடல் தனது மகன் ஆதித்யாவுடையது தான் என தெரிவித்தார். தொடர்ந்து, பூவரசியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ஆதித்யாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசார், பூவரசியை கைது செய்தனர். சிறுவனின் தந்தை ஜெயக்குமார் தற்போது நாகை விரைந்துள்ளார்.


கண்காணிப்பு கேமரா வேஸ்ட்? :சிறுவன் உடல், நாகை அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை போலீசாருடன், நாகை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆனந்தி, சிறுவன் உடலை பார்த்து கதறியழுது மயங்கி விழுந்தார். மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் ஆனந்தி சேர்க்கப்பட்டார்.நேற்று மாலை சிறுவன் ஆதித்யா உடல், பிரேத பரிசோதனைக்கு பின், நாகை சுடுகாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சோகத்தோடு பங்கேற்றனர்.நாகை பஸ் ஸ்டாண்டு முழுப்பகுதியையும் கண்காணிக்க, நவீன கேமரா பொருத்தப்பட்டு இதன் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி., அலுவலகத்தில் 24 மணி நேரமும், தனி அலுவலரால் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், சிறுவனை கொலை செய்து உடலை அடைத்து வைத்திருந்த சூட்கேஸ் இறக்கி வைக்கப்பட்டு, அனாதையாக கிடந்துள்ளது. இது நவீன கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத மர்மம் போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.


தொடரும் சூட்கேஸ் கொலைகள்: கொலை செய்து சூட்கேசில் பிணத்தை வைத்து அதை வெளியிடத்திற்கு கொண்டு சென்று போடுவது தற்போது தொடர்கதையாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை, சீனியர் மாணவர் ஜான் டேவிட் கொலை செய்து, சூட்கேசில் வைத்து வெளியில் கொண்டு சென்று போட்டார். அதே போன்று, பெங்களூரு ரயிலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தார். இவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை.அதே போன்று, போரூர் மருத்துவக் கல்லூரி மாணவர், தனது அத்தையை கொன்று சூட்கேசில் வைத்து எடுத்து வந்து மைதானத்தில் வைத்து எரித்துள்ளார். பூக்கடை பஸ் நிலையத்தில் ஒரு பெண்ணை கொன்று சூட்கேசில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாணியில், தற்போது இந்த சிறுவனையும் பூவரசி கொலை செய்து சூட்கேசில் வைத்து கடத்தியுள்ளார்.கொலை செய்து சூட்கேசில் வைத்து எடுத்துச் செல்லும் போது யாரும் அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து விட முடியாது என்பதால் கொலையாளிகளின் இந்தச் செயல் தொடர்கதையாகி வருகிறது.


"ஜெயக்குமாரை பழிவாங்கவே கொன்றேன்' : போலீசார் விசாரணையில் பூவரசி தெரிவித்திருப்பதாவது:ஜெயக்குமாருக்கும், எனக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். நான் கர்ப்பமடைந்த நிலையில், ஜெயக்குமாரின் வற்புறுத்தலால் கருவை கலைத்தேன். இரண்டு முறை அப்படி நடந்தது. தொடர்ந்து அவர், கருவை கலைக்கச் சொன்னதால் நான் ஆத்திரமடைந்தேன். திருமணம் செய்யுமாறு கூறியபோது ஜெயக்குமார் மறுத்தார். எனக்கு உருவான குழந்தையை கொன்றுவிட்டு, ஜெயக்குமார் மட்டும் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று எண்ணினேன்.


கடந்த 17ம் தேதி, சிறுவன் ஆதித்யாவை கூட்டிக் கொண்டு எனது விடுதிக்குச் சென்று, அங்கு அவன் அணிந்திருந்த டிரஸ்சில் இருந்து நைலான் கயிறை எடுத்து கழுத்தில் இறுக்கி கொன்றேன். பின்பு, தலையை பிளாஸ்டிக் கவரை கொண்டு மூடி உடலை சூட்கேசில் வைத்தேன். அங்கிருந்து ஆண்டர்சன் சர்ச்சிற்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்ற போது மயங்கி விழுந்து விட்டேன். போலீசார், மருத்துவமனையில் வைத்து விசாரிக்கும் போது, ஆதித்யாவின் உடல் சூட்கேசில் எனது அறையில் இருந்தது.மறுநாள் காலை மருத்துவமனையில் இருந்து வந்து, ஆட்டோவில் சூட்கேசை ஏற்றி கோயம்பேடு சென்று, அங்கிருந்து பஸ்சில் ஏற்றி புதுச்சேரி சென்றேன். அங்கு, நாகை பஸ்சில் சூட்கேசை ஏற்றி வைத்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பி விட்டேன். ஜெயக்குமாரை பழிவாங்கவே நான் இந்த கொலையை செய்தேன்.



No comments:

Post a Comment