காதலனுக்காக அவரது வீட்டு முன் தர்ணா நடத்திய பெண், திடீரென முதல் கணவருடன் சேர்ந்து சென்றார்.
குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த தையாலுமூடு ராக்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோ கன் (27). மளிகை கடை வைத்திருந்தார். இவரது பக்கத்து ஊரான எள்ளுவிளையை சேர்ந்தவர் சந்தியா (23). இவர், 5 ஆண்டுக்கு முன்பு சென்னையில் பணிபுரிந்தபோது, செல்வம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சூர்யா, சந்துரு என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
செல்வத்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் சந்தியாவை விட்டுவிட்டு குழந்தைகளை அழைத்துச் சென்று அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். சந்தியா எள்ளுவிளைக்கே வந்துவிட்டார். அப்போது அசோகனுடன் பழக்கம் ஏற்பட்டு¢ நாளடைவில் காதலாக மாறியது. காதலுக்கு அசோகனின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் குருசடிக்கு சென்று திருமணம் செய்துகொண்டனர். பின்னர் சென்னையில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அசோகனை தொடர்பு கொண்ட அவரது பெற்றோர், சந்தியாவை மருமகளாக ஏற்றுக்கொள்வதாக கூறி ஊருக்கு அழைத்துள்ளனர். இதை நம்பி ராக்கோடு வந்த அசோகனை பெற்றோர் தரப்பினர் காரில் கடத்திச் சென்றனர். தட்டிக்கேட்ட சந்தியாவை அடித்து உதைத்து விரட்டினர். மறுநாள் காலை அசோகன் வீட்டு முன்பு சந்தியா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது.
மார்தாண்டம் மகளிர் போலீசார், சந்தியாவையும் அசோகனின் பெற்றோரையும் அழைத்து விசாரித்தனர். அசோகனுடன் சேர்ந்து வாழ்வதில் சந்தியா உறுதியாக இருந்தார். மகனை மறுநாள் ஆஜர்படுத்துவதாக கூறிவிட்டு சென்ற பெற்றோர், பின்னர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, போலீசார் சந்தியாவின் முதல் கணவர் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று மார்த்தாண்டம் வந்த செல்வத்துடன் சந்தியாவை சந்திக்க வைத்தனர். இருவரும் சிறிது நேரம் தனியாக மனம் விட்டு பேசினர். பின்னர் கணவருடனே செல்வதாக சந்தியா கூறினார். இதையடுத்து அவரை செல்வத்துடன் போலீசார் அனுப்பிவைத்தனர்.
No comments:
Post a Comment