Tuesday, August 3, 2010

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது


திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசென்ஸ் புதுப்பிக்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கனகா, அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிகிறார். மூன்றாண்டுக்கு ஒருமுறை, லைசென்சை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 31ம் தேதியோடு லைசென்ஸ் முடிய உள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பே, ஏஜன்ட் லைசென்சை புதுப்பிக்க கனகா, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து கனகா, நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம்(46) விவரம் கேட்டார்.அதற்கு அவர், "500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், 1,000 ரூபாயும் லஞ்சம் கொடுத்தால் தான், லைசென்சை புதுப்பிக்க முடியும்' என கூறினார். 500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வாங்கிக் கொடுத்த கனகா, நாளை வந்து 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி கனகா, நேற்று காலை, சிறுசேமிப்பு உதவி இயக்குனர் திலகமணியிடம் 1,000 ரூபாய் கொடுத்தார். அதை வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.அவரை கைது செய்ததோடு, பொன்னகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி, பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணம், பணம், நகை கைப்பற்றப்பட்டது.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலகமணி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment