Tuesday, April 27, 2010

சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ. சேலை, ஜாக்கெட் கிழிப்பு



தமிழக சட்டசபை இன்று காலை நடந்த அமளியின் போது, சபாநாயகர் உத்தரவுபடி அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சியினரைச் சபை காவலர்கள் சபையை விட்டு அப்புறப்படுத்திய போது, பெண் எம்.எல்.ஏவின் சேலை மற்றும் ஜாக்கெட் கிழிக்கப்பட்டதாக எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அ.தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் எழுந்து விலைவாசி உயர்வு குறித்தும், பொது வேலை நிறுத்தம் குறித்தும் பேச முயன்றனர்.

"கேள்வி நேரத்தின்போது எந்த பிரச்சினையும் எழுப்ப கூடாது. கேள்வி நேரம் முடிந்ததும் நீங்கள் விரும்பும் பிரச்சினை பற்றி பேசலாம்" என்ற சபாநாயகரின் பதிலைச் சட்டை செய்யாமல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்ப தொடங்கினார்கள்.

"அவைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. எல்லோரும் அமைதியாக உட்காருங்கள். இப்படி நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் அமைதியாக உட்காரவிட்டால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறேன்" என்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் சபாநாயகரின் எச்சரிக்கையையும் மீறி, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடியே சபையை நடத்த விடாமல் நின்றனர். "சபை நடவடிக்கை தொடர வேண்டும் எனில் எங்களை முதலில் பேச அனுமதியுங்கள்" என்று எதிர்கட்சியினர் குரல் எழுப்பினர்.

"எதுவானாலும் கேள்வி நேரம் முடிந்தபிறகு உங்களுக்கு பேச வாய்ப்பு தரப்படும். இப்போது இருக்கையில் அமருங்கள். உங்களுக்குப் பணிவோடு தெரிவிக்கிறேன், நீங்களாக வெளியேறினால் பிரச்சினை இல்லை. நானே வெளியேற்றினால் இன்று முழுவதும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாமல் போய்விடும்" என்றார் சபாநாயகர்.

உடனே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கையை விட்டு எழுந்து ஒன்றுகூடி சபாநாயகர் அருகே வந்து கோஷம் எழுப்பினார்கள். இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் இருக்கையை விட்டு எழுந்து சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினார்கள்.

சுமார் 15 நிமிட நேரம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பியபடி இருந்ததால் சபையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை உருவானது. தொடர்ந்து அவர்களை சபாநாயகர் மீண்டும் எச்சரித்தார். பணிவோடும் கேட்டுப்பார்த்தார். 7 முறை சபாநாயகர் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கையில் அமரச்சொன்னார். ஆனாலும் எதிர்க்கட்சியினர் அதை பொருட்படுத்தாமல் கோஷம் எழுப்பினார்கள்.

"சட்டசபையில் இப்படி தொடர்ந்து கோஷம் எழுப்புவது அநாகரீகம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கேள்வி நேரம் முடிந்ததும் அந்த கட்சியின் கொறடாவோ, வேறு யாரோ பேச வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக தருவார்கள். அதை விட்டுவிட்டு இப்படி கோஷம் எழுப்புவது அழகல்ல" என்றார் அமைச்சர் அன்பழகன்.

ஆனாலும் சபையில் தொடர்ந்து அமளி நிலவியது. "இதே அவையில் 2 நாட்களுக்கு முன்பு கேள்வி நேரத்தை ஒத்தி வைத்ததற்கு ஆட்சேபம் தெரிவித்த செங்கோட்டையன், இன்று அதற்கு நேர்மாறாக கேள்வி நேரத்தில் பிரச்சினை எழுப்புகிறார். இது எப்படி நியாயம் ஆகும்" என்றார் அமைச்சர் பொன்முடி.

"அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கிறார்கள். எனவே அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அமைச்சர் துரைமுருகன் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் சபை காவலர்களை வரவழைத்து கோஷம் எழுப்பியவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

உடனே நான்கு பக்கங்களிலும் இருந்து வந்த சபை காவலர்கள் அ.தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களை சபையில் இருந்து வெளியேற்றினர். வெளியேற மறுத்த சில எம்.எல். ஏ.க்களை தூக்கிச்சென்று வெளியேற்றினர். அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.க்களை பெண் காவலர்கள் இழுத்துச் சென்றனர்.

இதில் அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. இளமதியின் சேலை மற்றும் ஜாக்கெட் லேசாக கிழிந்ததாக அவர் வெளியே வந்து குற்றம் சாட்டினார். பின்னர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசியபோது, "மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்பட்டபிறகு பெட்ரோல், கேஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. நூல் விலை உயர்வால் 10 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள்.

மத்திய அரசும், மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் மின்சார பற்றாக்குறையால் அனைத்து மக்களும் துன்பப்படுகிறார்கள். எனவே மத்திய- மாநில அரசுகள் பதவி விலக வலியுறுத்தி இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தம் குறித்து பேசுவதற்காகத்தான் சட்டசபையில் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற உத்தரவிட்டார். சபை காவலர்கள் சிலர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள். பெண் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றியபோது அவர்களது வயிற்றில் குத்திவிட்டனர். இதில் அவர்களின் சேலை, ஜாக்கெட் கிழிந்தது" என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment